சென்னை தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றது. அந்த வேளையில், விமான நிலையம் அருகே இண்டிகோ பணியாளர்கள் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த இண்டிகோ பணியாளர்கள் இருவரையும் மீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், போக்குவரத்து காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், காயமடைந்த இருவரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பணியாளர்கள் ஆனந்த், ஜாவித் என்பது தெரியவந்தது.
மேலும் சொகுசு காரை அதிவேகமாக இயக்கி வந்தது குரோம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்சரண்(20) என்பதும் தெரியவந்தது. இதனிடையே சாய்சரணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.