கடந்த சில மாதங்களாக போலி கால் சென்டர்கள் மூலம், காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து பேசுவதாக் கூறியும், ’குறைந்த வட்டியில் வங்கிக் கடன்’ போன்ற ஆசை வார்த்தை கூறியும் பண மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இது போன்ற புகார்கள் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
அதனடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திருமுல்லைவாயலில் மோசடி கும்பல் ஒன்று செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்தியக் குற்றப்பிரிவு அலுவலர்கள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், பட்டதாரி இளம் பெண்களை பணிக்கு அமர்த்தி மோசடியில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், பொது மக்களிடம் அவர்கள் எவ்வாறு மோசடி செய்து வந்தார்கள் என்பதை நடித்து காண்பிக்கச் சொல்லியும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி கும்பலின் தலைவன் ஜே.எஸ்.ஆர்.கோபி, முக்கிய நிர்வாகிகளான வளர்மதி, அவரது கணவர் ஆண்டனி உள்ளிட்ட 14 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜே.எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் போலி கால் செண்டர் நடத்தி கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டர் தடுப்புக் காவலில் இவர்கள் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வெளியில் வந்து போலி கால் சென்டரைத் தொடங்கி பொது மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும், வங்கிக்கடன் பெற்றுத் தருவதாக செல்போன் மூலம் யார் தொடர்பு கொண்டாலும் பொது மக்கள் எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து வாக்குறுதி அளித்த கனிமொழி