திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய அலுவலர் காணாமல் போன சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்திலுள்ள அணுமின் நிலையத்தில் துணை மேலாளராக பணியாற்றிய மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சினேகன் சக்ரபோதி (36) என்பவர் அக்டோபர் 10ஆம் தேதி முதல் பணிக்கு வராத காரணத்தால், 12ஆம் தேதி அன்று அவர் தங்கியிருந்த அணுமின்நிலைய குடியிருப்பில் சென்று உடன் பணியாற்றும் அலுவலர்கள் பார்த்துள்ளனர்.
அங்கு பொருள்கள் எல்லாம் அப்படியே கிடந்துள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர் அங்கும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். உடனடியாக மூத்த மேலாளர் அமிர்தவள்ளி இச்சம்பவம் குறித்து கூடங்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இருப்பினும் இதுவரை காணாமல் போன அலுவலரை காவல் துறையினர் கண்டுபிடிக்கவில்லை. இதுகுறித்து கூடங்குளம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவிடம் கேட்டபோது, “ஒரு மாதத்திற்கு முன்பு தனது குடும்பத்தை மேற்கு வங்காளத்தில் விட்டு விட்டு வந்துள்ளார். அப்போது குடும்பத்துடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் உதவி மேலாளர் சினேகன் சக்ரபோதி மாயமாகியுள்ளார். தற்போது அவரது கைபேசி எண்ணைக் கொண்டு ஆய்வுசெய்து வருகிறோம். கடைசியாக அவரது கைபேசி எண் எந்த இடத்தில் இயங்கியுள்ளது என்பதை ஆய்வு செய்கிறோம். அதன் பிறகே அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் மாயமான உதவி மேலாளருக்கு அணுமின் நிலையத்தில் பணிபுரிந்த போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டு அதை அணுமின் நிலைய நிர்வாகிகள் மறைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.