கிருஷ்ணகிரி: ஓசூரில் கர்நாடகா மாநிலத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதியான சூசூவாடி பகுதியில் சிப்காட் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லாரியில் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்காவை மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ஒட்டி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள குட்காவை மூட்டைகளில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. கடத்தி செல்ல திட்டமிடப்பட்டிருந்த குட்கா சென்னையில் எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர், தொடர்ந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.