பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி நடைபெற்று இருப்பதாகக்கூறி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் தகுதியில்லாத பலருக்கு முறைகேடாக பல கோடி ரூபாய் பணம் கொடுத்து மோசடி நடந்திருப்பது அம்பலமானது.
குறிப்பாக 60 விழுக்காட்டுக்கு மேல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்தில் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நாள்தோறும் பணம் பறிமுதல் செய்வதும், மோசடியில் ஈடுபட்டோரை கைது செய்யும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், கிசான் திட்ட மோசடி தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டு, 100 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து, இதுவரை 105 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடரும் தீவிர விசாரணையில் இன்னும் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பல முக்கிய அரசு அதிகாரிகள் இவ்வழக்கில் சிக்க வாய்ப்புள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திருமண மண்டப முன்பதிவு தொகை வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு