நாகை மாவட்டம், சீர்காழிஅருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவர் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் கடந்த 5ஆம் தேதி குடும்பத்துடன் கொடியம்பாளையத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு மறுநாள் மதியம் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 56 பவுன் தங்க நகைகள், 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, இளையராஜா சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் டிஎஸ்பி வந்தனா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், இளையராஜாவின் உறவினர் பிரதீப் (22) என்பவரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரனை செய்தனர். அதில் வீட்டை பூட்டிவிட்டு இளையராஜா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட பிரதீப் அன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து, தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும், கொள்ளையடித்த நகைகள், பணத்தை ராதாநல்லூரிலுள்ள பிரதீப்பின் நண்பர்கள் குற்றாலீஸ்வரன் (21), முத்தையா (22) ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்ததை அறிந்த தனிப்படை காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 56 சவரன் தங்க நகைகள், 96 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மீட்டு அவர்களை கைதுசெய்தனர்.