தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜய் (38) அப்பகுதியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறார். அப்பகுதியை சுற்றி வருவாய் அலுவலகம், பள்ளிகள், திருக்கோயில்கள் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும்.
இந்நிலையில் கடை உரிமையாளர் விஜய் தனது கடைக்கு அருகில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடையில் பணியாளர்களை அமர்த்திவிட்டு தனது நண்பருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்தச் சமயத்தில் அப்பகுதியில் நீண்ட நேரம் நோட்டமிட்ட இளைஞர் ஒருவர், விஜய் நிறுத்தி சென்ற இரு சக்கர வாகனத்தை எவ்வித பதற்றமுமின்றி இருசக்கர வாகனத்தில் இருந்த தலைக்கவசத்தையும் எடுத்து அணிந்துகொண்டு வாகனத்தையும் பொறுமையாக திருடிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து திரும்பி வந்த கடை உரிமையாளர் விஜய் தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளார். இதில் தனது வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தென்காசியில் பட்டப்பகலில் தொடரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க...நான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் - கங்கனாவின் வைரல் வீடியோ