திருப்பத்தூர் மாவட்டம், சோமநாயக்கன்பட்டி ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர், சசிகுமார் (30). இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சத்யபிரியா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சசிகுமாருக்கும், சத்யபிரியாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு (டிச.9) இருவருக்கும் இடையே மீண்டும் குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த சசிகுமார் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து, தனது குழந்தைகள் மற்றும் தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து, சசிகுமார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்காக சசிகுமார் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்டாறம்பள்ளி காவல் துறையினர், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: '2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல மோசடிகளைச் செய்த திமுக ஊழலைப் பற்றி பேசலாமா?'