விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கீழ்க்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செம்பக்குறிஞ்சி நெடுஞ்சாலையோரம் கடந்த 16ஆம் தேதியன்று காரின் முன்பக்கம் டயர் எரிந்து கொண்டிருந்ததாக கீழ்க்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர்.
பின் காரின் கதவை திறந்து பார்த்தபோது மூட்டைக்குள் ஏதோ கட்டப்பட்டிருந்தது. மூட்டையை திறந்து பார்த்தபோது தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு சடலம் இருந்தது. காவல் துறையினர் உடனடியாக சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
பிறகு காரை சோதனையிட்டபோது இறந்தவரின் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டது. அதன்மூலம் இறந்தவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி நெல்லிக்கனி தெருவைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் பழனிவேல் என்பது தெரியவந்தது.
பின்பு அடையாள அட்டையிலிருக்கும் முகவரிக்கு சென்று அவரது மனைவி மஞ்சுளாவிடம் கணவர் இறந்த செய்தியை கூறியபோது எந்தவொரு பதற்றமும் இல்லாமல் இயல்பாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் மஞ்சுளாவை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு காவல் துறையினர் அவரிடம் விசாரணை செய்ததில், பழனிவேலை தனது தம்பி ராமலிங்கம், அவரது நண்பர்களான மணிகண்டன், வெற்றிவேல் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் வைத்து கொலைசெய்ததாகவும் அதனை காவல் துறையினரிடமிருந்து மறைக்கவே கீழ்க்குப்பம் அருகே உள்ள செம்பாக்குறிஞ்சி வனப்பகுதியில் சடலத்தை காரில் வைத்து எரித்துவிடலாம் என திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், வெற்றிவேல் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து பழனிவேலை கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.