ஆவடி டேங்க் பேக்டரி சாலை-கோவில் பதாகை சாலை சந்திப்பில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கார், காவலர்கள் தடுத்தும் நிற்காமல், மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து, அந்த காரை ஜீப்பில் விரட்டிச் சென்ற காவல் துறையினர், ராஜீவ்காந்தி நகர் பகுதியில் மறித்துப் பிடித்தனர்.
அப்போது, அந்த காரில் இருந்து குதித்து தப்பி ஓடிய இருவரை காவலர்கள் துரத்திப் பிடித்தனர். பின்னர் காரை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா போதைப் பொருட்கள் சிக்கின. இதையடுத்து, காருடன் குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், இருவரும் ஆவடியை அடுத்த கோடுவள்ளி, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகருப்பசாமி (28), ரமேஷ் (26) என தெரியவந்தது.
மேலும், இவர்கள் திருவள்ளூரில் உள்ள முகேஷ் என்பவரிடம் இருந்து, குட்காவை விலைக்கு வாங்கி அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு காரில் கடத்தி வந்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், முக்கிய குற்றவாளியான முகேஷை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது