சென்னை: பயிற்சி மருத்துவர் கண்ணன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்புமுறிவு பிரிவில் பயிற்சி மருத்துவராக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் பணியாற்றி வந்தார். இச்சூழலில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், ஜூலை 20ஆம் தேதி திடீரென விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவர் கண்ணன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி மருத்துவர் கண்ணனின் தந்தை முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னையில் காவலரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது!
அதில், மருத்துவர் கண்ணன் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ததற்கான காயங்கள் உடலில் இல்லை, அங்கிருந்து சிசிடிவி படக்கருவிகள் செயல்பாட்டில் இல்லை என பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தார். ஏழுகிணறு காவல் நிலையம் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இது தொடர்பாக காவல்துறை நடத்திவரும் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.