சென்னை: ராயபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சையத் இப்ராஹீம்(57). இவர் ராயபுரம் மேம்பாலத்திலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் வசித்துவருகிறார். சென்னை பாரிமுனையில் உணவகம் நடத்திவரும் இவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்துள்ளார்.
இச்சூழலில், அவ்வப்போது மனைவியுடன் இப்ராஹீம் சண்டை போட்டு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து ஒரு வருட காலமாகவே இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல், தனித்தனியே ஒரே வீட்டிற்குள் சமைத்து, சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். அன்று முதல் மனைவி நிஷாவிற்கு, அக்கா மகன் அன்சாருதீன் உதவியாக இருந்து வந்துள்ளார்.
இதை தொடர்ந்து, நேற்றிரவு (அக்டோபர் 17) அன்சாருதீனிடம், “நீ ஏன் என் மனைவிக்கே அனைத்தும் செய்கிறாய்” என இப்ராஹீம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றவே, ஆத்திரமடைந்த இப்ராஹீம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அன்சாருதீனைச் சுட்டுள்ளார். இதில் கையில் குண்டு துளைத்துள்ளது.
பின்னர், இப்ராஹீம் தானும் கையில் சுட்டுக்கொண்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தகவலறிந்து வந்த ராயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.