சென்னை அம்பத்தூரை அடுத்த மேனாம்பேடு, முனுசாமி கோயில் தெருவிலுள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் காவல் துணை ஆணையர் தீபா சத்யனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அவரது உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த மளிகை கடையிலிருந்து சில இளைஞர்கள் குட்கா பொருள்களை வாங்கிச் சென்றதை கண்டறிந்தனர். இதனையடுத்து, அந்த கடைக்குள் அதிரடியாக புகுந்த தனிப்படை காவல் துறையினர் , தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில், மூட்டை, மூட்டையாக குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 750 கிலோ எடையுள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடையின் உரிமையாளர் நீதிமான் (35) என்பவரை கைது செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களையும், வியாபாரி நீதிமானையும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் தனிப்படை காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்!