சென்னை ஆலந்தூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக புனித தோமையார் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜலட்சுமிக்குத் தகவல் கிடைத்ததுள்ளது. இத்தகவலின் அடிப்படையில் ராஜலட்சுமி தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆலந்தூர் பகுதி முழுவதும் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆலந்தூர் ஆசர்கான பகுதியில் வேகமாக ஒரு சரக்கு லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் காவல் துறையினர் அதனை நிறுத்தி வாகனத்திலிருந்த நான்கு நபர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அதிகரித்தது.
இதையடுத்து, சரக்கு லாரியை காவல் துறையினர் சோதனை செய்தனர், அப்போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த சரக்கு லாரியும், அந்த நான்கு பேரையும் புனித தோமையார் மலை காவல்நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த லாரியில் 330 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்பு கைது செய்த நான்கு பேரும் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முரளி (34), மகேஷ் (35), முத்துகிருஷ்ணன் (34), திண்டுக்கல்லை சேர்ந்த மகுடீஸ்வரன் (35) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக கடத்தி வந்தால் சிக்கிக்கொள்ள வாய்ப்பில்லை என்பதற்காக கருவாடு ஏற்றிச்செல்வதுபோல் இவ்வாறு கஞ்சாவை மறைத்துவைத்து கடத்திவந்ததாக ஒப்புக் கொண்டனர்.மேலும் காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
பின்னர் கூடுதல் ஆணையர் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த இரண்டு மாதங்களாக சென்னை முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்துவருகிறோம். ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திவருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 20 நாள்களாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ராஜலட்சுமி தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஈச்சர் வாகனத்தில் கருவாடு மூடைகளில் கடத்திவரப்பட்ட 330 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்தனர். மேலும் இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் என்று விசாரணை மேற்கொண்டுவருகின்றோம். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் முக்கியக் குற்றவாளிகளைத் தேடிவருகின்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரசவ வலிக்கு பயந்து இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!