சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் ஆதிவாசி நகர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சோமு (24). இவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் (22) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில் இரண்டு பேரும் அனகாபுத்தூர் பிரதான சாலையில் நேற்று (அக். 16) நள்ளிரவு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து பணம் இல்லாததால் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அப்போது அவர்களை துரத்திச் சென்ற வழிப்பறி கும்பல் பட்டாக்கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் இருவருக்கும் முதுகு, தலை உள்பட உடலில் பத்துக்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் விழுந்துள்ளன.
பின்னர் படுகாயமடைந்த கோகுல், சோமுவை அங்கிருந்த பொதுமக்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து வழிப்பறி கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இருவரை பிடித்து சங்கர் நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும் தப்பி சென்ற இருவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
பின்னர் இரண்டு பேரும் அனகாபுத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவலர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், இவர்கள் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஷா (25), அஜய் (23), கோபி (22), கிருஷ்ணாகாந்த் (23) என தெரியவந்தது. மேலும் கஞ்சா வாங்க கையில் பணம் இல்லாததால் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து சாலையில் சென்றிருந்தவர்களிடம் பட்டா கத்தியை காட்டி பணம் கேட்டோம் பணம் தர மறுத்ததால் பட்டா கத்தியால் அவர்களை வெட்டினோம் என ஒப்புகொண்டனர்.
இதையடுத்து நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.
இதையும் படிங்க: மூவரை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்! கடன் தொல்லையால் கொடூர முடிவு!