சென்னை: பில்லி சூனியம் களைவதாக மோசடி செய்த சாமியாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுக்கா மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரன்(45). மினிவேன் ஓட்டுநரான இவர், சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் சாலையில் சென்று கொண்டிருந்த சாமியார் ஒருவரை பார்த்து, தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
உடனடியாக அந்த சாமியார் உனக்கு பில்லி சூனியம் சிலர் வைத்துள்ளதாகவும், அதனை களைய சென்னை வருமாறும், அதற்காக ரூ.2 லட்சம் பணம், 2 கோழிகள் எடுத்து வருமாறும் கூறியுள்ளார். இதைகேட்ட ராஜகுமாரன், தான் சொந்தமாக வைத்திருந்த மினிவேனை ரூ.5 லட்சத்திற்கு விற்றுவிட்டு, தனது உறவினருடன் சென்னை வந்துள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வாயிலில் நின்றிருந்த சாமியாரை அழைத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த வேளையில் சாமியார் பணம், கோழி ஆகியவற்றை எடுத்துவந்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார்.
உடனடியாக ராஜகுமாரன், அந்த சாமியாரிடம் ரூ.2 லட்சம் பணத்தையும், 2 கோழிகளையும் கொடுத்துள்ளார். அதை பெற்று கொண்ட சாமியார், பூஜை பொருள்கள் வாங்கி வருவதாக கூறி சென்றிருக்கிறார். பின்னர் வெகு நேரமாகியும் திரும்பாததால், தான் போலி சாமியாரிடம் ஏமாற்றமடைந்ததை ராஜகுமாரன் உணர்ந்தார். இச்சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் சென்ற ராஜகுமாரன், புகாரைப் பதிவுசெய்தார்.
புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர், ஸ்டான்லி மருத்துவமனையின் கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். மேலும், போலி சாமியாரின் கைபேசி எண்ணைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடினர். அதில், ராஜகுமாரனை ஏமாற்றியது, திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் உல்லாச நகரைச் சேர்ந்த யுவராஜ்(42) என்பது தெரியவந்தது.
அங்கு சென்ற காவல் துறையினர் வீட்டிலிருந்த யுவராஜின் உதவியாளர்கள் அமர்நாத் (21), சுரேஷ் (34), மனைவி ஜெயந்தி , பாப்பா(56) ஆகிய நான்கு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அப்போது, ஒரு குழுவாக செயல்பட்டு பில்லி சூனியம் எடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
இதில் முக்கியக் குற்றவாளியான யுவராஜ் வேளச்சேரி பகுதியில் ஒருவரை ஏமாற்ற சென்றதாகவும், அவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பிடிப்பட்ட நால்வரையும் கைதுசெய்து சிறையிலடைத்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், தப்பியோடிய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.