திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஜெராக்ஸ் கடை, துணிக்கடை உள்ளிட்ட கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.
ஜனவரி 25ஆம் தேதி பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் பேருந்து நிறுத்தம் எதிரே இருந்த கடைகளின் பூட்டை உடைத்து, செல்போன், ரூ. 5 ஆயிரம் ரொக்கம், துணிக்கடையில் ஜீன்ஸ் பேண்ட்கள், அருகில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் என்ஜின், இரும்பு பொருள்களும் திருடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று(ஜன.29) அண்ணாநகர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.
இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தபோது, உசிலம்பட்டி தாலுக்கா வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த வீரபாண்டி மகன் திருமுருகன் (21), சூலூர் வாரப்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் திருமூர்த்தி (22), பல்லடம் அண்ணாநகர் செல்வராஜ் மகன் பிரதீப் (23), அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் வினோத் (21) என்பதும், இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர், அவர்களிடமிருந்து, மோட்டார் சைக்கிள், பிரிண்டர் மெஷின், செல்போன்கள், பூட்டுக்களை உடைக்க பயன்படுத்திய இரும்பு ராடு உள்ளிட்டவை பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண் யானை உயிரிழப்பு - தீவிர விசாரணையில் வனத்துறை