சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (40). இவர் அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தங்க நகைக்கடை நடத்திவருகிறார். இந்நிலையில் இவரது நண்பர்கள் ரவி, ராஜா, பிரபாகர், கணேசன், அகமது செரீப் ஆகியோர், முகமது என்ற நபரிடம் தங்கக்கட்டி இருப்பதாகவும், அவர் குறைந்த விலையில் விற்றுவருவதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் பிரவீன் குமாரை 5 பேரும் அழைத்துக்கொண்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள முகமது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு முகமது காண்பித்த தங்கக்கட்டியைப் பார்த்த பிரவீன் குமார், பணத்தை கொடுத்துவிட்டு தங்கத்தை பெற்றுக்கொள்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.
பின்னர், பிரவீன் குமார் சுமார் 40 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு முகமது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் ஒரு அறையில் பிரவீன் குமாரை உட்கார வைத்துவிட்டு, 40 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு தங்கக்கட்டியை எடுத்துவருவதாக முகமது வேறொரு அறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வராததால், அவரை செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டபோது, அவசர வேலையாக எழும்பூர் வரை சென்றுள்ளதாகவும் அங்கே வந்து தங்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். பிரவீன் குமார் எழும்பூருக்குச் சென்று காத்திருந்தும் அங்கும் முகமது வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பிரவீன் குமாருக்கு முகமதுவை அறிமுகம் செய்து வைத்த அமைந்தகரையைச் சேர்ந்த பிரபாகரன் (50), துரைப்பாக்கம் ரவி (49), அகமது செரீப் (47), கணேசன் (57), ராஜா( 32) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள முகமதுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊழியர்களை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர் - வைரல் வீடியோ