அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் மாரிதாஸ் என்பவர், ’மாரிதாஸ் பதில்கள்’ என்ற தலைப்பில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இவர் திக, திமுக, திராவிட இயக்கங்களை கடுமையாக விமர்சித்தும், பாஜக, ஆர்.எஸ்.எஸ், ரஜினி போன்றோரை ஆதரித்தும் பதிவிடுவதாக குற்றஞ்சாட்டு உள்ளது. இந்நிலையில் மாரிதாஸ், சில பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கடுமையாக சாடி காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, போலி இ-மெயில் ஆதாரங்களை வைத்து அவதூறு பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து திமுக, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் பத்திரிகையாளர் ஆசிஃப் முகமது ஆகியோர் மாரிதாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் இணை நிர்வாக ஆசிரியர் வினய் சரவாகி என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவலர்களிடம் இது தொடர்பாக புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், மாரிதாஸ் மீது மோசடி, பொய்யாக புனையப்பட்ட டிஜிட்டல் ஆவணத்தை உண்மையானதாக உபயோகித்தல், நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டங்கள் 43 மற்றும் 63பி ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டடுள்ளது.
இதனடிப்படையில், மாரிதாஸிடம் விரைவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கிரெடிட் கார்டு பாயிண்டுகளை பணமாக மாற்றுவதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி!