திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் (60), தேவகி (55) தம்பதி. ஜெயபால் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மயிலேரிபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகின்றார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஜெயபால் தனது சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், கடையில் தேவகி மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், தேவகியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த அரை சவரன் நகையைப் பறித்துச் சென்றனர்.
மேலும் தடயங்களை அழிக்கும் வகையில் சடலத்தைச் சுற்றி மிளகாய்ப்பொடி தூவியும் மளிகைக் கடைக்கு தீவைத்தும் தப்பிச் சென்றுள்ளனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவயிடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது, தேவகி கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் கொடுத்த தகவலின் பேரில் நிகழ்விடம் சென்ற செட்டிபாளையம் காவல் துறையினர், தேவகியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், தடயங்களைச் சேகரித்த காவல் துறையினர், நகைக்காக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் வெட்டுக் காயங்களுடன் பிணமாக மீட்பு!