தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் குளிக்கச் சென்ற தந்தை -மகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் தனது மகள் தனுஸ்ரீயுடன் (8) இன்று (டிச.14) வைகை அணை பிக்டேம் பகுதிக்கு துணிகளை துவைத்துவிட்டு குளிப்பதற்காக சென்றார். காலையில் சென்றவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் வைகை அணை பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு அவர்கள் சென்ற பைக் மற்றும் துணிகள் மட்டும் இருந்தன.
இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக இதுகுறித்து வைகை அணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வலை உதவியுடன் தண்ணீரில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது வலையில் சிக்கிய அய்யப்பன் உடலை மீட்டனர்.
தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கிய தனுஸ்ரீயின் உடலை மீட்டனர். இருவரது உடலும் உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வைகை காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழகத்தில் 700 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை?