திருநெல்வேலி: தூத்துக்குடியில் காவல் ஆய்வாளர் தூண்டுதலால் விவசாயி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு திருநெல்வேலி சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வம் என்பவர் சில தினங்களுக்கு முன்பு சந்தேகத்திற்கு இடமான முறையில் திசையன்விளை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதில் தட்டரம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில், அதிமுக பிரமுகர் திருமணவேல் தனது மகனை கொன்றுவிட்டதாக உயிரிழந்த செல்வனின் தாயார் திசையன்விளை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதனையடுத்து காவல் ஆய்வாளர், திருமணவேல் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கையை வலியுறுத்தி உயிரிழந்த செல்வனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு காவல் இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்த செல்வனின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் காவல் இயக்குநர் உத்தரவையடுத்து இன்று முறைப்படி இந்த வழக்கு நெல்லை மாவட்ட சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், இந்த வழக்கின் ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அனில்குமாரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று முதல் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக வழக்கின் ஆவணங்களை பொறுத்து இன்று செல்வனின் சொந்த ஊரான சொக்கன்குடியிருப்பு பகுதி, தட்டார்மடம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணையைத் தொடங்க உள்ளனர். எனவே இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.