வாட்டஞ்சாட்டமான டிப்டாப் ஆசாமி ஒருவர், சாலையில் வருவோரை வழிமறித்து அவர்களிடமிருந்து செல்ஃபோன், வாட்ச், பணம், பர்ஸ் ஆகியவற்றை பிடுங்கியுள்ளார். மேலும் தன்னை அருகேயுள்ள வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் எனக்கூறி இச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். கள்ளக்குறிச்சி காவல்துறை கட்டுப்பாட்டில் வரும் பகுதியில், வரஞ்சரம் போலீசுக்கு என்ன வேலை என்பதை உணர்ந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர், வரஞ்சரம் காவல் நிலையத்திற்கே நேரில் சென்று விசாரித்தனர். அப்போதுதான் தெரிந்தது அந்த நபர் உச்சரித்த உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம், பல மாதங்களுக்கு முன்பே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது.
இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்த இளைஞர்கள், முட்டிப்போட வைத்து நன்கு கவனித்து தர்ம அடி கொடுத்து அனுப்பியுள்ளனர். அதனை படம்பிடித்து வாட்ஸ் ஆப்பில் பரவ விட்டதையடுத்து, தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் வைரலாகி வருகிறது.
அந்த டிப்டாப் நபர் அருகில் உள்ள விருகாவூர் கிராமத்தை சேர்ந்த துரை கார்த்திக் என்பதும், பகலில் பத்திரிகை நிருபர் எனக் கூறிக்கொண்டு பலரையும் மிரட்டி வருவதும், சில நேரங்களில் முக்கிய சாலை பகுதிகளில் நின்று கொண்டு காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி வழிப்பறி செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆகவே போலி வேடமிட்டு பொதுமக்களை ஏமாற்றி மிரட்டி, அவர்களின் உடைமைகளை சூறையாடி வரும் இந்த போலி நபரை கள்ளக்குறிச்சி காவல்துறையினர் பிடித்து தண்டிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மறுமணம் செய்துகாட்டுவேன் என சவால் விட்ட நபர் கொலை - இருவர் கைது