வேலூர் மாவட்டம் அம்முண்டி பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் லிடியா மேரி. இவரது மகள் ஜாக்லின் (28) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துவருகிறார். லிடியா மேரி இறந்ததால் ஜாக்லின் தன் அண்ணனுடன் தங்கியிருந்தார். ஜாக்லினுக்கு ஃபேஸ்புக் மூலமாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த விஜயசங்கர் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கடந்த 27ஆம் தேதி திருமணம் செய்ய முடிவுசெய்து வேலூரில் உள்ள விடுதியில் பத்து நாட்கள் தங்கியுள்ளனர். விடுதியின் உரிமையாளர் இவர்கள் மீது சந்தேகமடைந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் இருவரையும் விடுதியை விட்டு வெளியேற்றினார். பின்னர் இருவரும் ஜாக்லினின் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை ஜாக்லின் வெளியில் சென்றிருந்தபோது விஜயசங்கர் அவருக்கு ஃபோன் செய்துள்ளார்.
அப்போது ஜாக்லின், விஜயசங்கரின் அழைப்பை ஏற்காமல், நீண்ட நேரம் வேறு யாருடனோ செல்ஃபோனில் பேசினார் எனக் கூறப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயசங்கர் ஜாக்லினை கத்தியால் கழுத்து, மார்பு என ஒன்பது இடங்களில் சராமரியாக குத்தியுள்ளார். வலி தாங்க முடியாமல் ஜாக்லின் கத்தியதால், வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டுருந்த அவருடைய அண்ணன் வீட்டினுள்ளே சென்று விஜயசங்கரிடமிருந்து ஜாக்லினை மீட்டு கதவை மூடியுள்ளார். பின்னர் ஜாக்லினை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
இதற்கிடையே, அக்கம்பக்கத்தினர் திருவலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது, விஜயசங்கர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார்.
அதன்பின் காவல் துறையினர் விஜயசங்கரின் உடலை உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது ஜாக்லின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதையும் படிங்க: பணியில் சேர்ந்து 18 நாட்களில் தபால்துறை பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை!