புதுச்சேரி: காவல் ஆய்வாளர் பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி பணமோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி கோரிமேடு காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இனியன். சமீபத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஆய்வாளர் இனியனை தொடர்புகொண்டு உங்களுக்கு என்ன பிரச்னை, ஏன் பணம் கேட்டுள்ளீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து யார் உங்களிடம் பணம் கேட்டது என ஆய்வாளர் இனியன் கேள்வியெழுப்பி விசாரணை நடத்தினார்.
அப்போது இனியன் பெயரில் போலியான முகநூல் கணக்குத் தொடங்கி, அவரின் நண்பர்களிடம் மெசஞ்சரில் தனக்கு பண கஷ்டம் இருப்பதாகவும், பண உதவி செய்யுமாறும் குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் இனியன் புதுச்சேரி சிபிசிஐடி காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சிபிசிஐடி காவல் துறையினர் அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்றும், இனியன் என நம்பி பணம் யாராவது அளித்து ஏமார்ந்துள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். காவல் ஆய்வாளர் பெயரில் போலியாக முகநூல் கணக்குத் தொடங்கி, நூதன முறையில் கொள்ளையடிக்க முயற்சித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.