கோவை அவினாசி சாலையில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டுவருகிறது. அதே வளாகத்தில் காவலர்கள் குடியிருப்பும் உள்ளது. இந்நிலையில் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில், நடைப்பயிற்சி சென்ற வயதான பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். குற்றப்பிரிவு ஆய்வாளர் சுஜாதா தலைமையில் அங்கு தீவிர விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் திருப்புவனம், பூவந்தியை சேர்ந்த முனீஸ்வரன், என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இவர் காவலர் என்பதும் 2011ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர் என்பதும் 2017ஆம் ஆண்டு கோவை வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் சக காவல்துறையினரின் மூன்று கைப்பேசிகள், இரு சக்கர வாகனங்களை திருடியதால் , 2019ஆம் ஆண்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து திருடப்பட்ட தங்கச் செயின்களை பறிமுதல் செய்த காவல்துறையினர். அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.