நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்ன குன்னூர் பகுதியில் மலை காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் தனது தோட்டத்தில் வனவிலங்கு நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், தோட்டத்தில் காய்கறி சாப்பிட நுழைந்த ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனையறிந்த தோட்டத்தினர் மின்சாரம் தாக்கி இறந்த யானையை அதே தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் இரவேடு இரவாக புதைத்தனர். நேற்று (அக்.19) பிற்பகல் நேரத்தில் வனத்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்ற போது, அழுகிய வாடை அடித்துள்ளது. தோட்டத்தை சோதனையிட்டதில் பூக்கலிப்டஸ் இலைகள் மூடபட்டு, யானை புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த தோட்டத்தில் பணியாற்றிய விக்னேஷ்வரன், கோபாலகிருஷ்ணன், அஜீத்குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தலைமையில் நடந்த ஆய்வில், அந்த யானையை புதைக்கபட்டு எரிக்க முயன்றது கண்டுபிடிக்கப்படது.
யானையை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள், உடற்கூறாய்வு மேற்கொண்டனர். கைதான மூன்று பேர் மீது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்ட விரோதமாக மின்சாரம் பயன்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.
இதையும் படிங்க: தாயார் மறைவுக்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து தலைவர்கள் ஆறுதல்!