சென்னை: ஆவடியை அடுத்த திருநின்றவூர், ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (85). இவரது மூன்று மகன்கள் கீழ்த்தளம், முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர். இவர் தனது வீட்டின் இரண்டாவது தளத்தில் தனியாக வசித்துவந்தார். தந்தை பாலகிருஷ்ணனை அவரது மூன்று மகன்களும் மாறி, மாறி கவனித்துவந்தனர்.
இந்த நிலையில், காலையில் ஒரு மருமகள் பாலகிருஷ்ணனுக்கு உணவு கொடுத்துவிட்டு வந்துள்ளார். மற்றொரு மருமகள் மதியம் அவருக்கு உணவு கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது, படுக்கை அறை முழுவதும் எரிந்து பாலகிருஷ்ணன் உடல் கருகி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநின்றவூர் காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பாலகிருஷ்ணனுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது, அவர் சிகரெட் புகைத்துவிட்டு படுக்கையறையில் போட்டிருக்கலாம். அந்த சிகரெட் துண்டு, தெரியாமல் படுக்கையில் விழுந்து தீப்பற்றி எரிந்து பாலகிருஷ்ணன் உடல் முழுவதும் தீயில் கருகி இறந்து இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். உயிருடன் முதியவர் எரிந்து பலியானது திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை!