நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் சின்னுசாமி (44). இவர் பெங்களூருவில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமாவதி, திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.
இந்த நிலையில், பெங்களூருவில் தங்கிப் பணியாற்றி வந்த சின்னசாமிக்கு, நேற்று முன்தினம்(நவ.08) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வீட்டுக்கு வருவதாக செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னுசாமி, சின்னாளபட்டி அருகே உள்ள செட்டியபட்டி ரயில்வே கேட் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதி, கடிதத்தையும், செல்போனையும் தன் இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, அந்த வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
சின்னுசாமி எழுதியிருந்த கடிதத்தில், "என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் எனது உடலும், மனமும் சோர்வடைந்து விட்டது. எனவே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என ஆங்கிலத்திலும், அதன் கீழே தமிழிலும் எழுதியிருந்தார்.
இதற்கிடையில், ரயில் தண்டவாளத்தில், ஒருவர் சடலமாக கிடப்பதாக திண்டுக்கல் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள் சின்னுசாமியின் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கஞ்சா விற்பனை செய்த சிவ பாரத் சேனா அமைப்பின் தலைவர் கைது