கே.கே.நகர் 12ஆவது செக்டாரில் வசித்து வருபவர் தனசேகரன். முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரான தனசேகரன், தற்போது திமுக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தாலும், கட்சியிலும், பகுதியிலும் மிகுந்த செல்வாக்கு மிக்கவராவார்.
தனசேகரன் தனது வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகத்தை இயக்கி வந்த நிலையில், அங்கு எம்ஜிஆர் நகர் சேக்கிழார் தெருவை சேர்ந்த அமுதா (34) என்பவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து தனசேகரனின் அலுவலகத்திலேயே அமுதா வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை 3 மணியளவில் தனசேகரனின் வீட்டிற்கு வந்த அமுதாவின் கணவர் பொன்னுவேல், வாசலில் நின்று மனைவி அமுதாவுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென அமுதாவின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பொன்னுவேல் வெட்டியதால் அவர் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு தடுக்க வந்த தனசேகரனின் தலையிலும், கையிலும் வெட்டி விட்டு தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பொன்னுவேல் தப்பியோடியுள்ளார்.
படுகாயமடைந்த தனசேகரன் மற்றும் அமுதாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த கே.கே.நகர் காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியதோடு, தப்பியோடிய பொன்னுவேலையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர். கே.கே.நகர் தனசேகரன் தாக்கப்பட்டது தெரிந்து அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்துள்ளதால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக காவல்துறையினரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கு.க.செல்வம் மருமகன் மரண வழக்கு - குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக காவல்துறை தகவல்