டெல்லி: டெல்லியில் பிப்ரவரி 24ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். இந்நிலையில், ஜப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் மிகப்பெரிய அளவில் கல்வீச்சு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தன.
அப்போது, தீபக் தாஹியா என்ற தலைமை காவலரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் மிரட்டுவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் நடந்து சில நாள்கள் கழித்து அவரை காவலர்கள் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் ஷாரூக் பதான் என்பது தெரியவந்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் அவர் மீண்டும் பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று (நவ.10) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி அமிதாப் ராவத், “ஷாரூக் பதான் னின் கடந்த கால செயல்பாடுகள், அவர் தப்பிச் சென்ற விதம், தலைமறைவாக இருந்த நாள்கள் என அவர் மீது பல்வேறு ஐயப்பாடுகள் உள்ளன.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர் டெல்லி கலவரத்தில் பங்கெடுத்துள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நின்றிருந்த காவலர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தற்போது அவருக்கு நீதிமன்ற பிணை வழங்குவது ஆபத்தானது” என்று கூறி அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: டெல்லி கலவரம் எதிரொலி: கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்