கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கணபதிபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ், சதீஷ், காளி நண்பர்களான இவர்கள் சந்நிதி தெரு நூலகம் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. சம்பவத்தன்று
அவர், தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர்கள் மூவரின் மீதும் ஊற்றி தீவைத்து கொளுத்தினார். பின்பு அக்கம்பக்கத்தினர் அவர்களைக் காப்பாற்றி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்த, ராஜசேகரனைப் பிடிக்க முயன்றபோது அவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து அவரைப் பிடிக்க முயன்றதில் காவல் துறையினரின் மீதும் பெட்ரோலை ஊற்றினார்.
பின்னர், தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு, தப்பித்து ஓட முயன்றுள்ளார். அவரை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர்.
இந்நிலையில், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த காளி வீடு திரும்பிவிட்டார். சதீஷ், வெங்கடேஷ் இருவரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ராஜசேகரன், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.