தென்காசி மாவட்டம் சிவகிரியை அடுத்த தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் உடையார். இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. உடையாருக்கு ஆதரவாக அவரது உறவினர் முருகன், ராமகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் முருகனை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டு தனது உறவினர்களுடன் முருகன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ராமகிருஷ்ணன் தரப்பினர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இஸ்ரவேல் என்பவர் பலியானார். முருகன் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது தொடர்பாக ராமகிருஷ்ணன் (57), அந்தோணி ராஜ் (49), சக்திவேல் (35), தர்மர்(34) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, வழக்கு நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதிகட்ட விசாரணை முடிந்து, நீதிபதி கோகிலா இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். அதில் அந்தோணி ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், சக்திவேல் மற்றும் தர்மர் ஆகியோருக்கு தலா ஒற்றை ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். குற்றவாளி ராமகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதால், தண்டனை பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இதையும் படிங்க: முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியாளர் கைது!