பெரம்பலூர்: கோயில் பொருட்களை தொடர்ந்து திருடி வந்த தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மங்கலமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருக்கன்குடி பிரிவு பாதையில் நேற்று (செப். 29) மங்கலமேடு காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமாருடன் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வாகனத்தில் கோயில் மணி, குத்துவிளக்கு ஆகியவை இருந்ததைக் கண்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெரம்பலூர் அருகே உள்ள கீழப்புலியூர் பெரியாண்டவர் கோயிலில் குத்துவிளக்கு, மணி ஆகியவற்றைத் திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, அவரது மனைவி தேவி என விசாரணையில் தெரியவந்தது. அவர்களை மங்கலமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.