தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர் கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், குமரேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், பழனியப்பன் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின் நேற்று முன்தினம் விடியற்காலை புதுக்கோட்டையில் இருந்து வீடு திரும்பியபோது, வீட்டின் வெளிப்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பழனியப்பன் வீட்டிற்கு உள்ளே சென்றபோது, வீட்டிற்குள் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெளியே ஓடியுள்ளார். அப்போது வீட்டின் வெளியில் இருந்த இந்திரா, அந்த நபரின் மூக்கில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் நிலைதடுமாறி விழுந்தார். பின் பழனியப்பன், இந்திரா, குமேரசன் ஆகிய மூவரும் திருடனை பிடித்து சத்தம் போட்டுள்ளனர். அதனை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் திருடனை தப்பியோடி விடாதபடி பிடித்துக்கொண்டனர். மேலும், அந்த நபரிடம் இருந்து சுத்தியல், கம்பி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
பின் வீட்டிற்குள் சென்ற பழனியப்பன் பீரோவை திறந்து பார்த்தபோது, கோயிலுக்கு செலுத்த இருந்த காணிக்கை பணம், ஒரு செயின் உள்ளிட்டவற்றை திருடன் எடுத்தது தெரியவந்தது. பின் திருடனிடம் இருந்து அதையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு வந்து திருடனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் நான்கு பேருடன் திருட வந்தாகவும் தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் கத்தி அரிவாளுடன் வந்து தாக்கிய கொள்ளையர்களை வயதான தம்பதி தைரியமாக விரட்டியடித்தது போல, தற்போது ஒரத்தநாட்டில் திருடனை தாக்கி பிடித்த தம்பதிக்கு காவல்துறையினரும்,பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.