ஹத்ராஸ் (உத்தரப் பிரதேசம்): கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த தலித் பெண்ணின் உடலை உறவினர்களின் எதிர்ப்பை மீறி காவல் துறையினர் எரித்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண் இறந்ததையடுத்து, அவரின் உடல் நேற்றிரவு (செப் 29) சந்த்பா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்திற்குள் கொண்டுவரப்பட்டது. அனைத்து சூழலும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பெண்ணின் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் செய்து வந்தனர்.
பெண்ணின் உறவினர்கள் இரவில் அவரின் உடலை எரிக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு அலுவலர்களோ பெண்ணின் தந்தை ஓம் பிரகாஷை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். மேலும், தகனம் செய்யும் இடத்தில் பெண்ணின் உறவினர்கள் எவரையும் அனுமதிக்காமல் காவல் துறையினர் கடுமையாக நடந்ததாகத் தெரிகிறது.
காதல் திருமணத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகள்: குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை!
பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி சிதைந்த தன் மகளின் இறுதிச் சடங்கையாவது செய்ய தங்களை அனுமதியுங்கள் என்று பெண்ணின் தாய் இரவு முழுவதும் அரசு அலுவலர்களிடம் கதறி அழுது மன்றாடியுள்ளார். எதற்கும் அவர்கள் மனம் இரங்குவதாகத் தெரியவில்லை. உறவினர்கள், தாய், தந்தை இல்லாமல் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரேம் பிரகாஷ் மீனாவிடம் கேட்டபோது, உறவினர்கள் அனுமதியுடன், அவர்களின் உதவியுடன் தான் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறினார். மேலும், அமைதியாக அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டது என்றார்.
செப்டம்பர் 14ஆம் தேதி இளம்பெண் ஒருவர் ஆதிக்க சமூகத்தினர் நால்வரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைக்கப்பட்டும், நாக்கு வெட்டப்பட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், காட்டுப் பகுதியில் இருந்து அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை மாற்றியும் சிகிச்சைப் பலனளிக்காமல் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிக்கிய இரிடியம் உண்மையானதா? - எஸ்பி அளித்த தகவல்கள்
இதற்கிடையில் பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று உறவினர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன் விளைவாக, குற்றவாளிகளான சந்தீப், ராமு, லாவ்குஷ், ரவி ஆகிய நால்வர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.