திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதி பாளையம் பகுதியிலுள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக விஜயன் என்பவர் ஒப்பந்த தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில் அவென்யூ பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவலளித்துள்ளனர். இதையடுத்து மின்மாற்றியில் பழுது ஏற்பட்டிருப்பதாக மின் பாதை ஆய்வாளர் எல்.ஐ. சக்திவேல் கூறியதின்பேரில், ஒப்பந்த தொழிலாளி விஜயன் மின்மாற்றி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த பல்லடம் காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.