ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனுசாமி - பாவாத்தாள் தம்பதியினர். இவர்களுக்கு நவநீதகிருஷ்ணன், பார்த்திபன் என்கிற இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் நவநீதகிருஷ்ணன் ஈரோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார்.
முனுசாமி அதே பகுதியில் சாக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு உத்தரவுக் காலம் என்பதால் குடும்பத்தினர் அனைவரும் இந்தத் தொழிலில் அவருக்கு உதவியாக இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு சாக்கு மூட்டைகளைச் சுத்தம் செய்வதற்காக பாவாத்தாள், தனது மகன்களுடன் சின்னியம்பாளையம் அருகேயுள்ள ஏரிக்கு சாக்குகளுடன் சென்றுள்ளனர்.
சாக்குகளை தண்ணீரில் சுத்தம் செய்து கொண்டிருந்த மூவரும் எதிர்பாராதவிதமாக ஏரியில் ஆழம் நிறைந்த பகுதிக்குச் சென்று தண்ணீரில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடும் போராட்டத்திற்குப் பிறகு பாவாத்தாளும், பார்த்திபனும் மீண்டு கரைக்கு வந்துள்ளனர். ஆனால் ஒரு மணி நேரம் கடந்த பின்னரும் நவநீதகிருஷ்ணன் கரைக்கு வராததைக் கண்டு அதிர்ச்சியைடந்த அவர்கள், உடனடியாக அருகாமைப் பகுதியினரிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாகப் போராடி ஏரியின் ஆழமான பகுதியின் பாறையில் சிக்கிக் கொண்டிருந்த நவநீதகிருஷ்ணனின் உடலை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல் துறையினர், இறந்தவரின் உடலை உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசினர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவன் உயிரிழந்தது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிறந்தநாள் பரிசாக முத்தம் கொடுத்த செயல் அலுவலர் - பணியிடை நீக்கம்!