கோவை சிந்தாமணி பகுதியில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை நடத்திவந்த சங்கீதா(59) என்ற திருநங்கை, சாய்பாபா காலனி பகுதியில் வசித்து வந்தார். சங்கீதா நேற்றைய முன்தினம் (அக். 21) அவர் வீட்டில் கொலை செயப்பட்டு டிரம்மில் உப்பு போட்டு மூடப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாய்பாபா காலனி காவல் துறையினர் மூன்று தனி படைகளை அமைத்து விசாரித்தனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் ராஜேஷ்(23) என்பவரை கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சங்கீதா நடத்தி வரும் உணவகம் பற்றி யூட்யூபில் பார்த்து அங்கு வேலை கேட்டு சேர்ந்ததும், கடந்த ஒரு மாத காலமாக உணவகத்தில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வந்த நிலையில் சங்கீதாவின் வீட்டிலேயே தங்கி இருந்ததும் தெரியவந்தது.
மேலும் சங்கீதாவிற்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதனால் சங்கீதா காவல் துறையிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டியதால் கடந்த வியாழக்கிழமை இரவு சங்கீதாவை கொலை செய்து டிரம்மில் போட்டு துர்நாற்றம் வீசாமல் இருக்க உப்பு போட்டு மூடிவிட்டு சொந்த ஊரான தரங்கம்பாடிக்கு அவர் சென்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ராஜேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கல்!