சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தவர் ஹரி சாந்தி (32). திருவள்ளூர் மாவட்டம் காரப்பாக்கத்தைச் சேர்ந்தவரான இவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பணியிலிருந்து விலகிவிட்டார். தற்போது பெரம்பூர் மாதாவரம் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வரும் ஹரி சாந்தி அடிக்கடி கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், நேற்று மதியம் 1.30 மணியளவில் கல்லூரிக்கு வந்த அவரை பின் யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில், இன்று கல்லூரியின் முதல் மாடியில் உள்ள வகுப்பறையில், ஹரி சாந்தி மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அரும்பாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹரிசாந்தியின் இடது கை மணிக்கட்டு அருகே, கத்தியால் கிழித்தக் காயம் உள்ளது. அரும்பாக்கம் காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஹரி சாந்தி தன் அலைபேசியில் கடைசியாக யார் யாருடன் தொடர்பு கொண்டார் என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் கணேஷ் கூறும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஹரி சாந்தி தெலுங்கு பேராசிரியராக பணியாற்றி வந்ததாகவும், அடிக்கடி கல்லூரிக்கு வந்து செல்வாரென்றும் தெரிவித்தார். தெலுங்கு ஆசிரியர் நடராஜன் மற்றும் ஆசிரியர்களைச் சந்திக்க இங்கு வருவாரென்றும், அவர் மீது எந்த தவறான நிலைப்பாடும் எங்களுக்கு இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
இந்தத் தற்கொலை நிகழ்வு தொடர்பாக கல்லூரிப் பேராசிரியர் நடராஜனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, வைஷ்ணவா கல்லூரிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தற்கொலை வழக்கில் திருப்பம்; ஊர்மக்கள் அடித்துக் கொன்றதாக மனைவி புகார்... காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!