பல ஆரோக்கிய நன்மைகளையும் ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ள சப்பாத்தியை என்ன தான் தினசரி வீட்டில் செய்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தான் வரும். ஒரு நாள், மொறு மொறுப்பாக, மறுநாள் வரட்டி போன்றும் இருக்கும். ஆனால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றினால், சப்பாத்தி எப்போதும் சாஃப்டாக உப்பி வரும். ஒரு முறை இப்படி ட்ரை பண்ணிப்பாருங்க.
தேவையான பொருட்கள்:
- பழுத்த வாழைப்பழம் - 1
- கோதுமை மாவு - 2 கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
சாஃப்ட் சப்பாத்தி செய்முறை:
- முதலில், பழுத்த வாழைப்பழத்தை ஒரு அகல பாத்திரத்தில் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின்னர், அதனுடன் கோதுமை மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து விடுங்கள்.
- இப்போது, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை பிசைய வேண்டும். 3/4 கப்பிற்கு அதிகமாக தண்ணீர் சேர்த்தால் மாவு அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். நாம் மாவில் எந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து பிசைகிறோமோ அதுவே சப்பாத்தியின் மென்மைக்கு வழிவகுக்கும்.
- இருப்பினும், மாவு கடினமாக மற்றும் ஆங்காங்கே வெடிப்புகளுடன் இருந்தால், கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் தெளித்து மாவு மென்மையாகும் வரை பிசைந்து, 30 நிமிடங்களுக்கு மாவை தனியாக வைக்க வேண்டும்.
- பின்னர், உள்ளங்கையில் சிறுது எண்ணெய் ஊற்றி மீண்டும் மாவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவேண்டும்.
- பின், சப்பாத்தி கட்டையில் சிறிது மாவு தூவி உருட்டி வைத்த மாவை லேசாக தேய்க்கவும். பின், அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி, முக்கோண வடிவிற்கு மடிக்க வேண்டும்.
- அப்படி, மடித்தபின், சப்பாதிக்கு தேய்ப்பது போல அனைத்தையும் தேய்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- இப்போது, தோசைக் கல்லை ஹைய் பிளேமில் வைத்து, தேய்த்து வைத்த சப்பாத்தி மாவை இரண்டு பக்கங்களும் வேக வைத்து எடுத்தால் சப்பாத்தி நன்கு உப்பி வரும். குறைந்த தீயில் சப்பாத்தியை சுட்டால் சப்பாத்தி ரொட்டி போல் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்