வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை மரத்தில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஆண் சடலத்தின் பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை வைத்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில், அவர் சென்னையை அடுத்த வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் சசிகுமார் (46) என்றும், இவர் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது. தொழில் ரீதியாக இருந்த கடன் சுமையால் கேமராவை திருடியதாக தகவல் பரப்பியதால் மனமுடைந்த சசிகுமார், வேலூர் ஜோலார்பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
சசிகுமார் பிரபல நடிகை ராகவியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமார் உடலை கைப்பற்றிய ஜோலார்பேட்டை காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.