தேனாம்பேட்டை அண்ணாசாலையில் கடந்த 3 ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்த ரவுடிகள் சிடி மணி, காக்காத்தோப்பு பாலாஜி ஆகியோர் மீது, எதிர் தரப்பைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது.
இதில் சிடி மணி, காக்காத்தோப்பு பாலாஜி இருவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதுதொடர்பாக தி.நகரைச் சேர்ந்த மகேஷ் மற்றும் சிறுவன் ஒருவனை தேனாம்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். மகேஷை புழல் சிறையிலும், சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய தண்டையார்பேட்டை ஜான்சன், கமாலுதீன், பிரசாந்த், ராஜசேகர் ஆகிய 4 பேர் மதுரை நீதிமன்றத்திலும், தமிழ்செல்வன், ஹரிஷ் , சதீஷ் ஆகியோர் தென்காசி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிடி மணி, காக்காத்தோப்பு பாலாஜி ஆகியோரின் கூட்டாளிகள் புழல் சிறையில் இருப்பதால், சிறையில் மோதல் ஏற்படலாம் எனக் கருதிய சிறை நிர்வாகம், நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய 8 பேரையும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்துள்ளனர்.
இதனிடையே, சேலம் சிறையில் இருக்கும் 8 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேனாம்பேட்டை காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.
இதையும் படிங்க: தேனாம்பேட்டை கார் ஷோரூம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு - இருவர் தப்பியோட்டம