சென்னை விருகம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களிலிருந்து பெட்ரோல் மற்றும் விலையுயர்ந்த காலணிகள் அடிக்கடி திருடு போவதாக பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துவந்தனர்.
அதன் அடிப்படையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர், அப்போது சந்தேகத்துகிடமான வகையில் இரவு நேரங்களில் 20 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டை நோட்டமிட்டு உள்ளே சென்று இருசக்கர வாகனத்திலிருந்த பெட்ரோல் மற்றும் வீட்டின் வாசலில் இருந்த விலையுயர்ந்த காலணிகளை திருடி செல்வது தெரியவந்தது.
இதேபோல் நான்கு இளைஞர்கள் விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை திருப்பிவிட்டு திருட முயற்சிக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. ஏற்கனவே இதுதொடர்பாக இரண்டு முறை புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விலை உயர்ந்த பொருள்கள் திருடு போவதற்கு முன்பு காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அறந்தாங்கி, காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு!