சென்னை மெட்ரோ ரயில் இணை பொது மேலாளர் பார்த்திபன், கோயம்பேடு உதவி ஆணையர் ஜெயராமனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், தங்கள் நிறுவனத்தில் உதவி கணக்காளராக பணிபுரிந்துவந்த பர்கத் பானு என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துவரும் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்த்து அந்த நிறுவனங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் பணப்பட்டுவாடா செய்துவந்தார்.
இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பர்கத் பானு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டார். அப்போது 2018ஆம் ஆண்டு எட்டு மாதம் வேறு ஒரு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 23 லட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாயை தனிப்பட்ட ஒரு நபரின் கணக்கிற்கு பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தியதில் உதவி கணக்காளராக பணிபுரிந்துவந்த பர்கத் பானு (22), அவரது உறவினரான முகமத் ஜனத் என்பவரது கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த பர்கத் பானுவை நேற்று செம்மஞ்சேரி காமராஜ் நகரில் வைத்து கோயம்பேடு காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து எட்டு லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் மோசடி செய்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரியவந்துள்ளது.