கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தையடுத்த நடூரில் பெய்த கனமழை காரணமாக, தீண்டாமைச் சுவர் என அப்பகுதியினரால் அழைக்கப்பட்ட, சிவசுப்பிரமணியம் என்பவர் வீட்டின் 20 அடி சுற்றுச்சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் அருகிலிருந்த வீடுகள் தரமட்டமாயின. அதில் அங்குத் தூங்கிக்கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாகக் பலியாகினர்.
டிசம்பர் 2ஆம் தேதி நடந்த இந்நிகழ்வு தொடர்பாக நில உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை பல்வேறு போராட்டங்களுக்குப் பின் மேட்டுப்பாளையம் காவல் துறை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தது.
இந்நிலையில், தனக்குப் பிணை வழங்கக்கோரி நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், கனமழையின் காரணமாகவே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அசம்பாவிதம் நிகழ்ந்ததாகவும் எந்த உள்நோக்கத்துடனும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லையென்றும் எனவே, தனக்குப் பிணை வழங்கினால் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சேஷசாயி, சிவசுப்பிரமணியத்திற்கு நிபந்தனைப் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகைக் கொண்ட இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டுமெனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கி, அம்மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: விவாகரத்தான பெண் மர்மமான முறையில் கொலை; தந்தை தலைமறைவு!