ஆன்லைன் கந்துவட்டி கடன் மோசடி வழக்கில் சீன நாட்டினர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் ஈடுபட்டு கைதான சீன நாட்டினர் 2 பேரும் சென்னை, பெங்களூருவில் உள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிலிருந்து சட்டவிரோதமாக 1600 சிம் கார்டுகளை வாங்கியது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து 500 சிம் கார்டுகளை பெற்று இருப்பதும் காவல் துறை விசாரணை மூலம் அறியப்படுகிறது. இதேபோன்று பெங்களூருவில் உள்ள பிரபலமான செல்போன் நிறுவனத்தில் இருந்து 600 சிம் கார்டுகள் என மொத்தமாக 1600 சிம் கார்டுகளை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த 1600 சிம் கார்டுகளை கடன் வழங்கும் போலி பெங்களூரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்குப் பயன்படுத்த வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சீன செயலி பயன்பாட்டுக்கு சட்டவிரோதமாக கொடுத்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக சிம்கார்டுகள் கொடுத்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்திடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.