சென்னை அடுத்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நகராட்சி குப்பை லாரி ஒன்று குரோம்பேட்டை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அப்போது தாம்பரம் பணிமனை அருகே உள்ள சிக்னலில் திரும்பும்போது, அந்த வழியாக தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ், டெம்போ வேன், ஒரு கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் டெம்போ வேனிற்கு நடுவே வந்த கார், விபத்தில் சிக்கியதில் அப்பளம் போல் நொறுங்கி முழுவதுமாக சேதமடைந்தன. தனியார் நிறுவன பேருந்து, வேன்களில் வந்த சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இது குறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து காவல் துறையினர் காரில் வந்த தாய், தந்தை, குழந்தை மூன்று பேரையும் அரை மணி நேரம் போராடி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.
இந்த விபத்து காரணமாக தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர்வரை ஜிஎஸ்டி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து காவல் துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து சீரானது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...தடுப்பூசிப் போடும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்; தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு!