கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இந்த கும்பலை சென்னை முட்டுக்காடு பகுதி அருகேயுள்ள பங்களா ஒன்றில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீலாங்கரையை சேர்ந்த முகமது முசாமில் (34), அய்யாதுரை (32), பால் விஜய் (35) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
வங்கிகளில் போலி ஆவணங்களை அளித்து கார் லோன் பெறுவதை வாடிக்கையாகக் கொண்ட இந்தக் கும்பல், இடைத்தரகர் மூலம் வங்கி மேலாளரை அணுகி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா யுகோ, விஜயா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று கார் வாங்கி, பின்னர் அந்தக் காரை தங்களது பெயருக்கு ஆவணங்களை மாற்றி சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்துள்ளனர்.
இந்தக் கும்பல் சுமார் ரூ. 3 கோடி 80 லட்சம் வரை மோசடி செய்துள்ள நிலையில், தங்களது செல்போன் எண் மற்றும் சுய விவரங்களை மாற்றி தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களிடமிருந்து ஆர்டி, ஜீப் ரேங்கலர் உள்ளிட்ட பல விலை உயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டன.
லோன் பெறுவதற்கு முன்பு நீலாங்கரை, பனையூர், முட்டுக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் பங்களா, கார்களை வாடகைக்கு எடுத்து வங்கி அலுவலர்களை நம்ப வைத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் இவர்களை கைது செய்ய முடியாமல் திணறி வந்த நிலையில், தற்போது பிடிபட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளரான தில்லை கோவிந்தன், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார் லோன் மோசடி கும்பல் புகார் அளித்திருந்தார்.
அதில், இடைத்தரகர் மூலம் கார் வாடகைக்கு விடும் தொழில் ஈடுபடுவதாகவும், தங்களது தொழிலை பெருக்க லோன் தேவைப்படுவதாக வருமான வரி உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து தன்னிடம் கார் லோன் வாங்கிய கும்பல் ஒன்று கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.
அத்துடன், தங்களது செல்போன் எண்களை மாற்றி தலைமறைவாகி இருந்து வந்ததாக தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: லஞ்சம் கேட்ட போலீஸார்- கட்டுக்கட்டாக சிக்கிய பணம்