மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை கைதிகளாக உள்ள காவலர்கள் பிணை கோரிய மனுவிற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தங்களுக்கான பிணை மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜூலை ஒன்றாம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது வரை சிறையில் இருக்கிறோம்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில், தற்போது சிபிஐ அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அலுவலர்கள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது.
எனவே, எங்களுக்கு பிணை வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவோம் என்றும் உறுதி கூறுகிறோம். ஆகவே, இந்த வழக்கில் எங்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பாரதிதாசன் முன்பாக இன்று (ஆகஸ்ட் 21) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர், காவலர் தாமஸ் பிரான்சிஸ் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சாதாரண கணினி இயக்கும் வேலை மட்டுமே பார்க்கிறார். அவருக்கு இந்த வழக்கில் எவ்வித தொடர்பும் கிடையாது எனக் கூறினார்.
அப்போது சிபிஐ தரப்பு வழக்குரைஞர் கதிர்வேல், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் இறந்த ஜெயராஜ் மனைவி செல்வராணி, மனுவில் இடை மனுதாரராக சேர்க்கப்பட்டு, வழக்குரைஞர் லஜபதிராய் ஆஜராகி இரண்டு மனுதாரர்களுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.